top of page
00:00 / 05:02

அதிகாரம் >>  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36

எண்ணாகமம் 9

1. அவர்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தர் சீனாய் வனாந்தரத்தில் மோசேயை நோக்கி:

2. குறித்த காலத்தில் இஸ்ரவேல் புத்திரர் பஸ்காவை ஆசரிக்கக்கடவர்கள்.

3. இந்த மாதம் பதினாலாந்தேதி அந்திநேரமான வேளையாகிய குறித்த காலத்தில் அதை ஆசரிக்கக்கடவீர்கள்; அதற்குரிய எல்லாக் கட்டளையின்படியேயும் முறைமைகளின்படியேயும் அதை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்.

4. அப்படியே பஸ்காவை ஆசரிக்கும்படி மோசே இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டான்.

5. அதினால் முதலாம் மாதம் பதினான்காம் தேதி அந்திநேரமான வேளையில், சீனாய் வனாந்தரத்தில் பஸ்காவை ஆசரித்தார்கள்; கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.

6. அந்நாளில் சிலர் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டபடியினால் பஸ்காவை ஆசரிக்கத்தகாதவர்களாயிருந்தார்கள்; அவர்கள் அந்நாளிலே மோசேக்கும் ஆரோனுக்கும் முன்பாக வந்து:

7. நாங்கள் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டவர்கள்; குறித்த காலத்தில் இஸ்ரவேல் புத்திரரோடேகூடக் கர்த்தருக்குக் காணிக்கையைச் செலுத்தாதபடிக்கு, நாங்கள் விலக்கப்பட்டிருக்கவேண்டியது என்ன என்றார்கள்.

8. மோசே அவர்களை நோக்கி: பொறுங்கள்; கர்த்தர் உங்களைக்குறித்துக் கட்டளையிடுவது என்ன என்று கேட்பேன் என்றான்.

9. கர்த்தர் மோசேயை நோக்கி:

10. நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களிலாகிலும் உங்கள் சந்ததியாரிலாகிலும் ஒருவன் பிரேதத்தினால் தீட்டுப்பட்டாலும், பிரயாணமாய்த் தூரம்போயிருந்தாலும், கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டும்.

11. அவர்கள் அதை இரண்டாம் மாதம் பதினாலாந்தேதி அந்திநேரமான வேளையில் ஆசரித்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களோடும் கசப்பான கீரைகளோடும் புசித்து,

12. விடியற்காலம்மட்டும் அதில் ஒன்றும் மீதியாக வைக்காமலும், அதில் ஒரு எலும்பையும் முறிக்காமலும், பஸ்காவினுடைய சகல முறைமைகளின்படியும் அதை ஆசரிக்கக்கடவர்கள்.

13. ஒருவன் சுத்தமுள்ளவனுமாய்ப் பிரயாணம் போகாதவனுமாயிருந்தும், பஸ்காவை ஆசரிக்காதேபோனால், அந்த ஆத்துமா குறித்த காலத்தில் கர்த்தரின் பலியைச் செலுத்தாதபடியினால் தன் ஜனத்தாரில் இராமல் அறுப்புண்டுபோவான்; அந்த மனிதன் தன் பாவத்தைச் சுமப்பான்.

14. ஒரு பரதேசி உங்களிடத்திலே தங்கி, கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டுமானால், அவன் அதைப் பஸ்காவின் கட்டளைப்படியும் அதின் முறைமையின்படியும் ஆசரிக்கக்கடவன்; பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே கட்டளை இருக்கவேண்டும் என்று சொல் என்றார்.

15. வாசஸ்தலம் ஸ்தாபனஞ்செய்யப்பட்ட நாளிலே, மேகமானது சாட்சியின் கூடாரமாகிய வாசஸ்தலத்தை மூடிற்று; சாயங்காலமானபோது, வாசஸ்தலத்தின்மேல் அக்கினிமயமான ஒரு தோற்றம் உண்டாயிற்று; அது விடியற்காலமட்டும் இருந்தது.

16. இப்படி நித்தமும் இருந்தது; பகலில் மேகமும், இரவில் அக்கினித்தோற்றமும் அதை மூடிக்கொண்டிருந்தது.

17. மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பும்போது இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுவார்கள்; மேகம் தங்குமிடத்தில் இஸ்ரவேல் புத்திரர் பாளயமிறங்குவார்கள்.

18. கர்த்தருடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்படுவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; மேகம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும் நாளெல்லாம் அவர்கள் பாளயத்தில் தங்கியிருப்பார்கள்.

19. மேகம் நெடுநாள் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்படாமல் கர்த்தரின் காவலைக் காத்துக்கொண்டிருப்பார்கள்.

20. மேகம் சிலநாள் மாத்திரம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்கியிருந்து, கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணப்படுவார்கள்.

21. மேகம் சாயங்காலந்தொடங்கி விடியற்காலமட்டும் இருந்து, விடியற்காலத்தில் உயர எழும்பும்போது, உடனே பிரயாணப்படுவார்கள்; பகலிலாகிலும் இரவிலாகிலும் மேகம் எழும்பும்போது பிரயாணப்படுவார்கள்.

22. மேகமானது இரண்டுநாளாவது ஒரு மாதமாவது ஒரு வருஷமாவது வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணாமல் பாளயமிறங்கியிருப்பார்கள்; அது உயர எழும்பும்போதோ பிரயாணப்படுவார்கள்.

23. கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணம்பண்ணுவார்கள்; கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிடுகிறபடியே கர்த்தருடைய காவலைக் காத்துக்கொள்வார்கள்.

bottom of page