வேதம் சொல்லும் ஓய்வு நாள் எது?
1. தேவன் எப்படிப்பட்டவர்?
தேவன் மாறாதவர், அவர் ஒருமுறை சொன்ன வாக்கை மாற்றாதவர்.
மல்கியா 3: 6. நான் கர்த்தர் நான் மாறாதவர்;
எபிரெயர் 13: 8. இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
எண்ணாகமம் 23: 19. பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?
ஏசாயா 40:8. புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல்லென்று உரைத்தது.
சங்கீதம் 33 : 11. கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.
2. எதை நாம் நம்ப வேண்டும்? எது உண்மையின்? எது சத்தியம்?
யோவான் 17
17. உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
சங்கீதம் 119
142. உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.
யோவான் 14
6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
3. நாம் யாரை தொழுது கொள்ள வேண்டும்?
தேவனை மாத்திரமே தொழுது கொள்ளவேண்டும்
வெளி 14
6. பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து,
7. மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்களென்று கூறினான்.
எப்படி தொழுது கொள்ள வேண்டும்?
தேவன் எப்படி சொன்னாரோ அப்படி தொழுது கொள்ள வேண்டும்
4. ஒரு நாள் எப்பொழுது ஆரம்பமாகி எப்பொழுது முடிகிறது?
ஆதியாகமம்1
5. ...சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.
8. ...சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.
13. சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.
19. சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.
23. சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று.
31. ...சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.
தேவனுடைய படைப்பின் படி, வேதத்தின் படி மாலை முதல் மாலை வரை ஒரு நாள் என்று தெளிவாகிறது.
5. வாரத்தின் நாட்கள் எவை?
முதல் நாள்
இரண்டாம் நாள்
மூன்றாம் நாள்
நான்காம் நாள்
ஐந்தாம் நாள்
ஆறாம் நாள்
ஏழாம் நாள் (அதாவது) ஓய்வு நாள்
- பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர 365 நாட்கள் ஆகிறது
- சந்திரன் பூமியை சுற்றி வர 1 மாதம் ஆகிறது
- பூமி தன்னைத்தான் சுற்றி வர 24 மணிநேரம் (அ) 1 நாள் ஆகிறது
- வாரத்தில் ஏழு நாட்கள் என்ன கணக்கில் வருகிறது என்று பார்த்தால் , தேவன் 6 நாள் படைப்பு 1 நாள் ஓய்வு நாள். இதுவே 1 வாரம்
6. ஒவ்வொரு நாளும் அவருடைய திட்டத்தின் படி படைத்த தேவன், வாரத்தின் ஓய்வு நாளை எப்போது உண்டாக்கினார்?
ஆதியாகமம் 2
2. தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.
3. தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
ஆறு நாள் படைப்பிற்கு பின்பு, தேவன் ஓய்வு நாளை ஏற்படுத்தி அதில் தேவன் ஓய்ந்திருந்தார். களைப்பினால் அவர் ஓய்ந்திருக்கவில்லை, மனுக்குலத்திற்கு ஓய்வு தேவை என்பதை அறிந்த தேவன் அதனை செய்து காட்டினார், ஆறாம் நாளில் படைக்கப்பட்ட நமது முத்த பெற்றோராகிய ஆதாம் ஏவாளோடு.
7. ஆபிரகாம் எந்த நாளில் ஆராதித்தார்?
ஆதியாகமம் 26
4. ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால்,
5. நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
தேவன் ஆபிரகாமுக்கு கட்டளைகளும் நியமங்களும் பிரமாணங்களும் இல்லை. அப்படியிருக்க எந்த கட்டளைகளும் நியமங்களும் பிரமாணங்களும் ஆபிரகாம் கடைபிடித்தார்?
ஆதியாகமம் முதல் உபாகமம் வரை எழுதின புத்தக ஆசிரியர் மோசே என்னும் தேவனுடைய அடியார். அவர்தான் முதலில் எழுத்து வடிவில் கட்டளைகளும் நியமங்களும் பிரமாணங்களை எழுதிக்கொடுத்தார். அப்படியிருக்க ஆபிரகாம் எந்த கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்தார் என்ற கேள்வி வரலாம். எழுத்து வடிவம் பெரும் முன் 'செவி வழி செல்வம்' என்னும் சொல்லுக்கேற்ப, ஆதாம் தேவனிடம் பெற்றுக்கொண்ட கட்டளைகளும் நியமங்களும் தன்னுடைய பிள்ளைகளுக்கு தன் சந்ததிகளுக்கும் சொன்னதே செவி வழி செல்வமாக சென்று ஆபிரகாம் தேவனுடைய கட்டளைகளை கைக்கொண்டார்.
தேவன் சொன்ன கட்டளைகளை தன பிள்ளைகளுக்கு ஆதாம் சொல்லிக்கொடுக்கும் போது, தேவன் சொன்ன ஓய்வு நாளையும் தொழுகை நாளையும் சொல்லிக்கொடுத்தார். வாரத்தின் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளை மனிதனுக்கு தேவனுக்கும் அடையாளமாக வைத்தார்; அதாவது தேவன் ஏற்படுத்தின வாரத்தின் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளில் தேவனை தொழுபவர்கள், படைத்த இறைவனை தொழுவதாக தேவன் ஏற்படுத்தினால். இதனை பின்வரும் கேள்வியில் பார்க்கலாம்.
8. 10 கட்டளைகளில் ஓய்வு நாள்
யாத்திராகமம் 20
9. ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;
10. ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருக ஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
11. கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
தேவன் 10 கட்டளைகளை சீனாய் மலையில் தன்னுடைய சொந்த விரலினால் எழுதி மோசேயிடம் , மக்கள் இந்த 10 கட்டளைகளை கைக்கொள்ளும் படி கொடுத்தார். அந்த 10 கட்டளையில் உள்ள நான்காம் கட்டளை "ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக" என்பதே. தேவன் தன்னுடைய சொந்த விரலினால் 10 கட்டளைகளை எழுதிக்கொடுத்தாரென்றால், அந்த கட்டளைகள் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் ஆராய வேண்டும்.
9. 10 கட்டளையில் தான் ஓய்வு நாள் தேவன் கொடுத்தாரா? அதற்க்கு முன்னாள் மக்கள் ஏழாம் நாளாகிய பரிசுத்த ஓய்வு நாளை ஆசாரிக்கவில்லையா?
அதற்கு முன் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளை ஆசாரித்தனர்
யாத்திராகமம் 16
28. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: என் கட்டளைகளையும் என் பிரமாணங்களையும் கைக்கொள்ள எந்தமட்டும் மனதில்லாதிருப்பீர்கள்?
29. பாருங்கள், கர்த்தர் உங்களுக்கு ஓய்வுநாளை அருளினபடியால், அவர் உங்களுக்கு ஆறாம் நாளில் இரண்டுநாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்; ஏழாம்நாளில் உங்களில் ஒருவனும் தன்தன் ஸ்தானத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன் தன் ஸ்தானத்திலே இருக்கவேண்டும் என்றார்.
30. அப்படியே ஜனங்கள் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார்கள்.
10 கட்டளைகளை தேவன் சீனாய் மலையில் கொடுக்கும் முன்னரே அவர்கள் ஓய்வு நாளை கைக்கொண்டார்கள் என்று வேதம் சொல்கிறது.
10. தாவீது தேவனின் கட்டளைகளை குறித்து என்ன சொல்லி இருக்கிறார்?
சங்கீதம் 119
4. உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாய்க் கைக்கொள்ளும்படி நீர் கற்பித்தீர்.
15. உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன்.
44. நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.
69. அகங்காரிகள் எனக்கு விரோதமாய்ப் பொய்களைப் பிணைக்கிறார்கள்; நானோ, முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன்.
93. நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர்.
100. உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப் பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன்.
141. நான் சிறியவனும் அசட்டை பண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன்; ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன்.
159. இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.
173. நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், உமது கரம் எனக்குத் துணையாயிருப்பதாக.
11. சாலமோன் தேவனின் கட்டளைகளை குறித்து என்ன சொல்லி இருக்கிறார்?
பிரசங்கி 12
13. காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
12. நெகேமியா தேவனின் கட்டளைகளை குறித்து என்ன சொல்லி இருக்கிறார்?
நெகேமியா 9
13. நீர் சீனாய் மலையிலிறங்கி வானத்திலிருந்து அவர்களோடே பேசி, அவர்களுக்குச் செம்மையான நீதிநியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர்.
14. உமது பரிசுத்த ஓய்வுநாளை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, உமது தாசனாகிய மோசேயைக்கொண்டு, அவர்களுக்குக் கற்பனைகளையும், கட்டளைகளையும் நியாயப்பிரமாணங்களையும் கற்பித்தீர்.
நெகேமியா 13
15. அந்த நாட்களில் நான் யூதாவிலே ஓய்வுநாளில் சிலர் ஆலைகளை மிதிக்கிறதையும், சிலர் ஆலைகளை தானியப் பொதிகளைக் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு வருகிறதையும், திராட்சரசம், திராட்சப்பழம், அத்திப்பழம் முதலானவைகளின் பற்பல சுமைகளை ஓய்வுநாளிலே எருசலேமுக்குக் கொண்டுவருகிறதையும் கண்டு, அவர்கள் தின்பண்டம் விற்கிற நாளைப்பற்றி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டேன்.
16. மீனையும் சகலவித சரக்குகளையும் கொண்டுவந்து, ஓய்வுநாளிலே யூதா புத்திரருக்கும் எருசலேமில் இருக்கிறவர்களுக்கும் விற்கிற சில தீரியரும் உள்ளே குடியிருந்தார்கள்.
17. ஆகையால் நான் யூதாவின் பெரியவர்களைக் கடிந்துகொண்டு: நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிற இந்தப் பொல்லாத செய்கையென்ன?
18. உங்கள் பிதாக்கள் இப்படிச்செய்ததினாலல்லவா, நமது தேவன் நம்மேலும் இந்தநகரத்தின்மேலும் இந்தத்தீங்கையெல்லாம் வரப்பண்ணினார்; நீங்களோவென்றால் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறதினால் இஸ்ரவேலின்மேலிருக்கிற உக்கிரத்தை அதிகரிக்கப்பண்ணுகிறீர்கள் என்று அவர்களுக்குச் சொன்னேன்.
19. ஆகையால் ஓய்வுநாளுக்குமுன்னே எருசலேமின் பட்டணவாசலில், மாலைமயங்கும்போது, கதவுகளைப்பூட்டவும், ஓய்வுநாள் முடியுமட்டும் அவைகளைத் திறவாதிருக்கவும் வேண்டுமென்று கட்டளையிட்டு, ஓய்வுநாளிலே ஒரு சுமையும் உள்ளே வராதபடிக்கு வாசலண்டையிலே என் வேலைக்காரரில் சிலரை நிறுத்தினேன்.
13. ஏசாயா பக்தன் பரிசுத்த ஓய்வு நாளை ஓய்வு நாளை குறித்து என்ன சொல்லி இருக்கிறார்?
ஏசாயா 56
1. கர்த்தர் சொல்லுகிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள் என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது.
2. இப்படிச் செய்கிற மனுஷனும், இதைப் பற்றிக்கொண்டிருந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, ஒரு பொல்லாப்பையும் செய்யாதபடி தன் கையைக் காத்துக்கொண்டிருக்கிற மனுபுத்திரனும் பாக்கியவான்.
3. கர்த்தரைச் சேர்ந்த அந்நியபுத்திரன்: கர்த்தர் என்னைத் தம்முடைய ஜனத்தைவிட்டு முற்றிலும் பிரித்துப்போடுவாரென்று சொல்லானாக; அண்ணகனும், இதோ, நான் பட்டமரமென்று சொல்லானாக.
4. என் ஓய்வுநாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகைளைத் தெரிந்துகொண்டு உடன்படிக்கையைப் பறறிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
5. நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன்.
6. கர்த்தரைச் சேவிக்கவும், கர்த்தருடைய நாமத்தை நேசிக்கவும் அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும், அவரைச் சேர்ந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதபடி ஆசரித்து என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நியபுத்திரர் அனைவரையும்,
7. நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்.
14. வாரத்தின் ஏழாம் நாளாகிய பரிசுத்த ஓய்வு நாளை குறித்து கர்த்தரின் வாய் என்ன சொல்கிறது?
ஏசாயா 58
13. என் பரிசுத்த நாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,
14. அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய், பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்டி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று.
15. இயேசு கிறிஸ்து என்று ஆலயம் சென்றார்?
மாற்கு 6
2. ஓய்வுநாளானபோது, ஜெபஆலயத்தில் உபதேசம்பண்ணத்தொடங்கினார். அநேகர் கேட்டு, ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கே இருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிபட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது?
லூக்கா 13
10. ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெபஆலயத்தில் போதகம்பண்ணிக் கொண்டிருந்தார்.
மாற்கு 2
27. பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது;
28. ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.
லூக்கா 4
16. தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்தில் பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.
இயேசு கிறிஸ்துவின் வழக்கமே ஓய்வுநாளில் ஆலயம் செல்வதாய் இருந்தது. இயேசு கிறிஸ்துவை பின்பற்றும் அவர் செய்ததை போன்றே செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்
16. அப்போஸ்தலர்கள் எந்த நாளில் ஆராதித்தார்கள்?
அப்போஸ்தலர் 13
14. அவர்கள் பெர்கே பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டு, பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவுக்கு வந்து, ஓய்வுநாளிலே ஜெபஆலயத்தில் பிரவேசித்து, உட்கார்ந்தார்கள்.
42. அவர்கள் யூதருடைய ஜெபஆலயத்திலிருந்து புறப்படுகையில், அடுத்த ஓய்வுநாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று புறஜாதியார் வேண்டிக்கொண்டார்கள்.
44. அடுத்த ஓய்வுநாளிலே கொஞ்சங்குறையப் பட்டணத்தாரனைவரும் தேவவசனத்தைக் கேட்கும்படி கூடிவந்தார்கள்.
அப்போஸ்தலர் 15
21. மோசேயின் ஆகமங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெபஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், பூர்வகாலந்தொடங்கிச் சகல பட்டணங்களிலும் அந்த ஆகமங்களைப் பிரசங்கிக்கிறவர்களும் உண்டே என்றான்.
அப்போஸ்தலர் 16
13. ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்.
அப்போஸ்தலர் 17
2. பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து,
அப்போஸ்தலர் 18
4. ஓய்வுநாள் தோறும் அவன் ஜெபஆலயத்திலே சம்பாஷணைபண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்திசொன்னான்.
17. தேவனுடைய பிள்ளைகள் கடைசிக்காலத்தில் (அதாவது) இயேசு கிறிஸ்து வரும் முன்பும் வாரத்தின் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளில் தொழுது கொள்வார்கள்?
வெளி 12
17. அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று.
தேவனுடைய 10 கட்டளைகள் (ஓய்வு நாள் கட்டளையும் சேர்த்து) கைக்கொள்ளும் மக்கள் மேல் தான் சாத்தானின் கோபம் வருகிறதென்று வேதம் சொல்கிறது. அப்படியானால், தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவது சாத்தானுக்கு பிடிக்கவில்லை. தேவன் சொன்னதை போல ஓய்வு நாளின் தேவனை ஆராதிப்பது சாத்தானுக்கு பிடிக்காததினால், அவன் கோபம் கொள்கிறான். ஆனால் தேவனுடைய பிள்ளைகளை தேவன் காப்பார். நாம் தேவனுக்கு கீப்படிக்கிறேனா என்பதே முக்கியம்.
18. புதிய வானத்திலும் புதிய பூமியிலும் கூட ஓய்வுநாளே
ஏசாயா 66
22. நான் படைக்கப்போகிற புதியவானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும் உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார்.
23. அப்பொழுது மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
19. பரிசுத்த ஓய்வு நாள் எதற்கு அடையாளம்?
எசேக்கியேல் 20: 20. என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றேன்.
யாத்திராகமம் 31: 13. நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்.
நாம் தேவனுடைய பிள்ளை என்பதற்கு அடையாளமே இந்த பரிசுத்த ஓய்வுநாள்
தேவன் இஸ்ரவேல் மக்களிடம் தன்னுடைய கையால் 10 கட்டளைகளை எழுதி கொடுத்தார். இந்த கட்டளைகள் ஒழுக்க பிரமாணம் என்றழைக்கப்படுகிறது. இந்த 10 கட்டளைகளின் உள்ள நாலாம் கட்டளை தான் ஓய்வு நாலாம் கட்டளை. இந்த ஓய்வு நாள் கட்டளை, மோசேயிடம் சீனாய் மலையில் முதலாவதாக கொடுக்கப்படவில்லை, ஆதாம் ஏவாளுக்கு ஆதி 2:2-3 இல் கொடுத்திருக்கிறார்.
தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு சடங்காச்சார பிரமாணங்களை மோசே மூலமாக எழுதி கொடுத்திருக்கிறார். அந்த சடங்காச்சார பிரமானங்களிலும் ஓய்வு நாட்கள் வருகிறது.
10 கட்டளையில் உள்ள ஓய்வு நாள் கட்டளை வேறு, சடங்காச்சார பிரமாணத்தில் உள்ள ஓய்வு நாள் வேறு. 10 கட்டளையில் உள்ள ஓய்வு நாள் என்பது, தேவன் படைத்தவர் என்பதை காட்டி தேவனை உண்மையாய் தொழுது கொள்பவர்களை அடையாளம் காட்டுகிறது. இந்த ஓய்வு நாள் நித்தியமானது. இந்த ஓய்வு நாள் புதிய வானத்திலும் புதிய பூமியிலும் கூட ஆசாரிக்கப்படும் (ஏசாயா 66:22, 23)
சடங்காச்சார பிரமாணத்தின் முடிவு கிறிஸ்துவே.
20. ஓய்வு நாளை அனுசரிப்பதால் தேவனிடம் இருந்து பெரும் ஆசீர்வாதம் என்ன?
உபாகமம் 28: 1-14
1. இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.
2. நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப்பலிக்கும்.
ஏசாயா 58
13. என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன்வழிகளின்படி, நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,
14. அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய், பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்டி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று.
21. வாரத்தின் கடைசி நாளாகிய ஏழாம் நாள், அதாவது தேவன் ஏற்படுத்தின ஓய்வுநாளின் விசேஷம் என்ன?
ஆதியாகமம் 2
2. தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.
3. தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
தேவன் மனிதனுக்காக உண்டாக்கின ஏழாம் நாளை தேவன் ஆசீர்வதித்தார், அந்த நாளை பரிசுத்தப்படுத்தினார். அந்த நாளை மனிதன் தேவனோடு இருக்கும்படி ஆதாம் நாளிலேயே ஏற்படுத்தினார்
22. ஏன் பரிசுத்தம் பெற வேண்டும்?
எபிரெயர் 12
14. யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.
23. வேதத்தின்படி உண்மையான சபையை எப்படி கண்டு கொள்ளலாம்?
வெளி 14
12. தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான்.
வெளி 12
17. அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று.
24. இன்று வாரத்தின் நாட்கள் பெயர் என்ன?
வேத நாட்கள் - இன்றைய நாளின் பெயர்
முதல் நாள் - ஞாயிற்று கிழமை
இரண்டாம் நாள் - திங்கள் கிழமை
மூன்றாம் நாள் - செவ்வாய் கிழமை
நான்காம் நாள் - புதன் கிழமை
ஐந்தாம் நாள் - வியாழக்கிழமை
ஆறாம் நாள் (அ)ஆயத்த நாள் - வெள்ளிக்கிழமை
ஏழாம் நாள் (அ) ஓய்வு நாள் - சனிக்கிழமை
ஆதாம் ஏவாள் ஓய்வு நாளை கடைபிடித்தார்
ஆபிரகாம் ஓய்வு நாளை கடைபிடித்தார்
மோசே ஓய்வு நாளை கடைபிடித்தார்
இஸ்ரவேல் மக்கள் ஓய்வு நாளை கடைபிடித்தனர்
இயேசு கிறிஸ்து ஓய்வு நாளை கடைபிடித்தார்
அப்போஸ்தலர்கள் ஓய்வு நாளை கடை பிடித்தனர்
புதிய வானம் புதிய பூமியிலும் ஓய்வுநாளை கடைபிடிப்பர்
மாற்றப்படாத அந்த பிரமாணமாகிய தேவனுடைய கட்டளையை இன்று நாமும் கடைபிடிக்கலாமே ...