top of page
Blue Background

23. புயலை அடக்குதல்

மத்தேயு 8

23. அவர் படவில் ஏறினபோது அவருடைய சீஷர்கள் அவருக்குப் பின்சென்று ஏறினார்கள்.

24. அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று; அவரோ நித்திரையாயிருந்தார்.

25. அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து, அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள்.

26. அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதலுண்டாயிற்று.

27. அந்த மனுஷர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள்.

மாற்கு 4

37. அப்பொழுது, பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று.

38. கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையை வைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள்.

39. அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று.

40. அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார்.

41. அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

லூக்கா 8

22. பின்பு ஒருநாள் அவர் தமது சீஷரோடுங்கூடப் படவில் ஏறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப் போனார்கள்.

23. படவு ஓடுகையில் அவர் நித்திரையாயிருந்தார். அப்பொழுது கடலிலே சுழல்காற்று உண்டானதால், அவர்கள் மோசமடையத்தக்கதாய்ப் படவு ஜலத்தினால் நிறைந்தது.

24. அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, மடிந்துபோகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய், அமைதலுண்டாயிற்று.

25. அவர் அவர்களை நோக்கி: உங்கள் விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

bottom of page