top of page
Blue Background

25. தண்ணீர் மேல் நடத்தல்

மத்தேயு 14

22. இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.

23. அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்.

24. அதற்குள்ளாக படவு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் அலைவுபட்டது.

25. இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார்.

26. அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள்.

27. உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.

28. பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான்.

29. அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின்மேல் நடந்தான்.

30. காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான்.

31. உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.

32. அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது.

மாற்கு 6

47. சாயங்காலமானபோது படவு நடுக்கடலிலிருந்தது; அவரோ கரையிலே தனிமையாயிருந்தார்.

48. அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால், அவர்கள் தண்டு வலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர் கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து, அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்து போகிறவர்போல் காணப்பட்டார்.

49. அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் கண்டு, ஆவேசம் என்று எண்ணி, சத்தமிட்டு அலறினார்கள்.

50. அவர்களெல்லாரும் அவரைக் கண்டு கலக்கமடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்று சொல்லி,

51. அவர்கள் இருந்த படவில் ஏறினார். அப்பொழுது காற்று அமர்ந்தது; அதினால் அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள்.

52. அவர்களுடைய இருதயம் கடினமுள்ளதாயிருந்தபடியினால் அப்பங்களைக்குறித்து அவர்கள் உணராமற்போனார்கள்.

யோவான் 6

16. சாயங்காலமானபோது அவருடைய சீஷர்கள் கடற்கரைக்குப் போய்,

17. படவில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராய்ப்போனார்கள்; அப்பொழுது இருட்டாயிருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார்.

18. பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளிந்தது.

19. அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் தண்டுவலித்துப் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக் கண்டு பயந்தார்கள்.

20. அவர்களை அவர் நோக்கி: நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.

21. அப்பொழுது அவரைப் படவில் ஏற்றிக்கொள்ள மனதாயிருந்தார்கள்; உடனே படவு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.

bottom of page