
4. பிசாசு பிடித்திருந்த இரண்டு பேர்
மத்தேயு 8
28. அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டில் வந்தபோது, பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் பிரேதக்கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியராயிருந்தபடியால், அந்த வழியாக ஒருவனும் நடக்கக்கூடாதிருந்தது.
29. அவர்கள் அவரை நோக்கி: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று கூப்பிட்டார்கள்.
30. அவர்களுக்குக் கொஞ்சதூரத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.
31. அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிக்கூட்டத்தில் போகும்படி உத்தரவுகொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன.
32. அதற்கு அவர்: போங்கள் என்றார். அவைகள் புறப்பட்டு, பன்றிக்கூட்டத்தில் போயின. அப்பொழுது, பன்றிக் கூட்டமெல்லாம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, ஜலத்தில் மாண்டு போயின.
33. அவைகளை மேய்த்தவர்கள் ஓடி, பட்டணத்தில் சென்று, இந்தச் சங்கதிகள் எல்லாவற்றையும், பிசாசு பிடித்திருந்தவர்களுக்குச் சம்பவித்தவைகளையும் அறிவித்தார்கள்.
34. அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் யாவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டுவந்து, அவரைக் கண்டு, தங்கள் எல்லைகளைவிட்டுப் போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.
மாற்கு 5
1. பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டில் வந்தார்கள்.
2. அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான்.
3. அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது.
4. அவன் அநேகந்தரம் விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டிருந்தும், சங்கிலிகளை முறித்து, விலங்குகளைத் தகர்த்துப்போடுவான்; அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது.
5. அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, கூக்குரலிட்டு, கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக்கொண்டிருந்தான்.
6. அவன் இயேசுவைத் தூரத்திலே கண்டபோது, ஓடிவந்து, அவரைப்பணிந்துகொண்டு:
7. இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு தேவன்பேரில் உமக்கு ஆணையென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்.
8. ஏனெனில் அவர் அவனை நோக்கி: அசுத்த ஆவியே, இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று சொல்லியிருந்தார்.
9. அப்பொழுது அவர் அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியோன் என்று சொல்லி,
10. தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்திவிடாதபடிக்கு அவரை மிகவும் வேண்டிக்கொண்டான்.
11. அப்பொழுது, அவ்விடத்தில் மலையருகே அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது.
12. அந்தப் பிசாசுகளெல்லாம் அவரை நோக்கி: பன்றிகளுக்குள்ளே போகும்படி, அவைகளுக்குள்ளே எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன.
13. இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்த ஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போயின; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்து மாண்டது.
14. பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு;
15. இயேசுவினிடத்தில் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் வஸ்திரந்தரித்து, உட்கார்ந்து, புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.
லூக்கா 8
27. அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாய்ப் பிசாசுகள் பிடித்தவனும், வஸ்திரந்தரியாதவனும், வீட்டில் தங்காமல் பிரேதக் கல்லறைகளிலே தங்கினவனுமாயிருந்த அந்தப் பட்டணத்து மனுஷன் ஒருவன் அவருக்கு எதிராக வந்தான்.
28. அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான்.
29. அந்த அசுத்த ஆவி அவனை விட்டுப்போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்த ஆவி வெகுகாலமாய் அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான்.
30. இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான்.
31. தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன.
32. அவ்விடத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாய் மலையிலே மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி தங்களுக்கு உத்தரவுகொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டன; அவைகளுக்கு உத்தரவுகொடுத்தார்.
33. அப்படியே பிசாசுகள் அந்த மனுஷனை விட்டு நீங்கி, பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து, மாண்டது.
34. அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள்.
35. அப்பொழுது, சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனுஷன் வஸ்திரந்தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.
36. பிசாசுகள் பிடித்திருந்தவன் சொஸ்தமாக்கப்பட்டதைக் கண்டவர்களும் அதை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
37. அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள திரளான ஜனங்கள் எல்லாரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, தங்களை விட்டுப் போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படவில் ஏறி, திரும்பிப்போனார்.
38. பிசாசுகள் நீங்கின மனுஷன் அவரோடேகூட இருக்கும்பட உத்தரவு கேட்டான்.
39. இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான்.